புக்கத்துறை - பெருநகர் சாலை விரிவாக்கத்துக்கு...ரூ.23 கோடி!:திட்டத்தை வேகப்படுத்த நெ.சா.துறை ஒதுக்கீடு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பகுதியில் புக்கத்துறை - பெருநகர் சாலை விரிவாக்க பணிகள், ஏற்கனவே மந்தகதியில் நடைபெறும் நிலையில், திட்டத்தை வேகப்படுத்த நெடுஞ்சாலை துறை, புக்கத்துறை -- பெருநகர் சாலை விரிவாக்க பணிக்கு, கூடுதலாக 23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.காஞ்சிபுரம் நெடுஞ்சாலை கோட்டம், உத்திரமேரூர் உதவி கோட்ட நெடுஞ்சாலை எல்லையில், புக்கத்துறை -- பெருநகர் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில், சென்னை, செங்கல்பட்டு, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு, தினமும் 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், உத்திரமேரூர் பகுதியிலிருந்து ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், மறைமலைநகர் ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான தனியார் கம்பெனி பேருந்துகளும், கல்லுாரி பேருந்துகளும் சென்று வருகின்றன.அதேபோல், சென்னையில் இருந்து செங்கல்பட்டு, புக்கத்துறை, உத்திரமேரூர், மானாம்பதி கூட்ரோடு வழியாக, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அதிகப்படியான சரக்கு வாகனங்களும், அரசு பேருந்துகளும் சென்று வருகின்றன. இந்நிலையில், இரு வழிச்சாலையாக உள்ள இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதை தவிர்க்க வாகன ஓட்டிகள் புக்கத்துறை -- பெருநகர் தடத்தை நான்கு வழிச்சாலையாக மாற்ற கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு புக்கத்துறை முதல் குமாரவாடி வரை, 3.6 கி.மீ துாரம், 26 கோடி ரூபாய் மதிப்பிலும், தொடர்ந்து, மீனாட்சி கல்லுாரி முதல் உத்திரமேரூர் வரை, 3.6 கி.மீ துாரம், 26 கோடி ரூபாய் மதிப்பிலும், வேடப்பாளையம் முதல் அம்மையப்பநல்லுார் வரை 1.5 கி.மீ சாலை துாரம் 16 கோடி ரூபாய் மதிப்பிலும், விரிவாக்க பணிகள் துவங்கியது.இந்த பணியை அதே ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், மழை மற்றும் இயற்கை பேரிடர் உள்ளிட்ட காரணங்களால் சாலை விரிவாக்க பணி, 2023ல் தான் முடிந்தது. புக்கத்துறை -- பெருநகர் நெடுஞ்சாலை, மொத்தம் 32 கி.மீ., நீளமுடையது.இதில், 8.8 கி.மீ., தூரம் மட்டுமே பணி முடிக்கப்பட்டு உள்ளது. நான்கு ஆண்டுகளாக சாலை விரிவாக்க பணியில், 50 சதவீதம் கூட முடிக்கப்படாமல் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, போதிய நிதியை அரசு ஒதுக்கீடு செய்வதில், காலதாமதம் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது, சாலவாக்கம் கூட்ரோடு முதல் நெல்வாய் கூட்ரோடு வரை, 3.5 கி.மீ., துாரம் சாலை விரிவாக்க பணிக்கு, 23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடக்க உள்ள பகுதியில், சாலையோரங்களில் உள்ள 250 மரங்கள், மின் கம்பங்கள், கட்டடங்கள் ஆகியவை அகற்றப்பட்டு வருகின்றன. அதற்கு பதிலாக, சாலையோரத்தில் 2,500 மரங்கள் மற்றும் 60 மின்கம்பங்கள், நான்கு மின்மாற்றிகள் அமைக்கப்பட உள்ளன.புக்கத்துறை -- பெருநகர் தடத்தை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, ஒவ்வொரு கட்டமாக நடந்து வருகிறது. தற்போது, சாலவாக்கம் கூட்ரோடு முதல் நெல்வாய் கூட்ரோடு வரை, 3.5 கி.மீ., தூரம் சாலை விரிவாக்க பணி மேற்கொள்ள, 23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தற்போது சாலையோரங்களில் உள்ள மரங்கள், மின் கம்பங்கள், மின் மாற்றிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இது முடிந்தவுடன் சாலை விரிவாக்க பணிகள் துவக்கப்படும். - அனந்த கல்யாணராமன்,உதவி கோட்ட பொறியாளர்,நெடுஞ்சாலை துறை,உத்திரமேரூர்.