காஞ்சிபுரம் - செங்கை தடத்தில் இணைப்பு சாலை புனரமைப்பு
வாலாஜாபாத்:சென்னை -- கன்னியாகுமாரி தொழிற்தடம் திட்டம் சார்பில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவாக்க பணி, கடந்த ஓராண்டாக நடைபெறுகிறது. ஏற்கனவே, 21 அடி அகலமாக இருந்த இச்சாலை, தற்போது 50 அடியாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது.இதற்காக, 2022ம் ஆண்டு, 39 கி.மீ., தூரத்திற்கான சாலை அகலப்படுத்துதல் மற்றும் புதிய பாலங்கள் அமைத்தல், தேவையான இடங்களில் கான்கிரீட் தடுப்பு ஏற்படுத்துதல், வடிகால்வாய் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.இதில், செங்கல்பட்டில் இருந்து வாலாஜாபாத் அருகே உள்ள புளியம்பாக்கம் வரை மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து வெண்குடி வரையிலான சாலைகளில் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.இச்சாலையில் விரிவாக்கப் பணி முடிவுற்ற பகுதிகளில், பிரதான சாலைகளில் இருந்து, கிராமங்களுக்கு பிரிந்து செல்லும் இணைப்பு பகுதிகள் சீரமைக்கும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, வாலாஜாபாத் அடுத்த வெண்குடி, ஒட்டிவாக்கம், ராஜாம்பேட்டை, புளியம்பாக்கம், சங்கராபுரம், திருமுக்கூடல் பாலாற்று பாலம், பழையசீவரம், உள்ளாவூர் உள்ளிட்ட பகுதிகளின் இணைப்பு சாலைகள் தார் ஊற்றி சீரமைக்கப்பட்டுள்ளது.