சின்னமதுரப்பாக்கம் சாலை வளைவில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
வாலாஜாபாத்:சின்னமதுரப்பாக்கம் சாலையில் அடுத்தடுத்துள்ள இரண்டு அபாயகரமான வளைவுகளில் விபத்து ஏற்படாமல் தடுக்க தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம், வெண்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னமதுரப்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில் இருந்து, தொள்ளாழி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் ஒன்றிய கட்டுப்பாட்டிலான சாலை உள்ளளது. குறுகியதான இச்சாலையில் சின்னமதுரப்பாக்கம் குடியிருப்பையொட்டி அடுத்தடுத்து இரண்டு இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. இந்த வளைவு பகுதிகளில் சாலையையொட்டிய நிலங்கள் தாழ்வானதாக உள்ளது. இதனால், இச்சாலை வளைவுகளில் பயணிக்கும்போது வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் சாலையோர தாழ்வான பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சின்னமதுரப்பாக்கம் வளைவுகளில், சாலையையொட்டி இரும்பு தடுப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.