| ADDED : நவ 21, 2025 01:36 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாய்க்கும், சாலைக்கும் இடையே உள்ள பள்ளத்தில் மண் நிரப்பி, சாலையை சமன் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாயின் இருபுறமும், 40 கோடி ரூபாய் செலவில், புதிதாக பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், காஞ்சிபுரம் காமராஜர் வீதிக்கும், சங்கூசாபேட்டைக்கும் இடையே உள்ள பாவாஜி தெருவில் மஞ்சள் நீர் கால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. முன் இருந்ததைவிட, தற்போது கால்வாயின் அகலத்தை குறைத்து தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளதால், சாலைக்கும் தடுப்புச்சுவருக்கும் இடையே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், அப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் மற்றும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் குறுகிய இடைவெளி உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே, காஞ்சிபுரம் பாவாஜி தெருவில், மஞ்சள் நீர் கால்வாயின் தடுப்புச் சுவருக்கும், சாலைக்கும் இடையே உள்ள பள்ளத்தில் மண்ணை நிரப்பி சாலையை சமன்படுத்த வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.