உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.637 கோடி பாதாள சாக்கடை, குடிநீர் திட்டம் முடக்கம்...தண்டம்!: 16 சதவீதம் கூடுதலாக கேட்கும் ஒப்பந்த நிறுவனம்

ரூ.637 கோடி பாதாள சாக்கடை, குடிநீர் திட்டம் முடக்கம்...தண்டம்!: 16 சதவீதம் கூடுதலாக கேட்கும் ஒப்பந்த நிறுவனம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், உலக வங்கி நிதியுதவியுடன், 637 கோடி ரூபாயில் மேற்கொள்ள வேண்டிய பாதாள சாக்கடை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், பணிகள் இன்னும் துவங்காமல் உள்ளன. திட்டத்தொகையில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், 16 சதவீதம் கூடுதலாக கேட்பதால், பேச்சு நடத்துவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.காஞ்சிபுரம் நகராட்சியாக இருந்தபோது, கடந்த 1975ல், அப்போதிருந்த 40 வார்டுகளுக்கு மட்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, 2013ல் நத்தப்பேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு, தேனம்பாக்கம் ஆகிய பகுதிகள், நகராட்சியுடன் இணைக்கப்பட்டன. ஆனால், நிதியில்லாத காரணத்தால், இப்பகுதிகளுக்கு பாதாள சாக்கடை வசதி செய்து கொடுக்க முடியவில்லை.இந்நிலையில், 2021ல் காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, உலக வங்கி நிதியுதவியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், 339 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டமும், 298 கோடியில் குடிநீர் திட்டமும் மேற்கொள்ள, காஞ்சிபுரம் மாநகராட்சி, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியது.ஆனால், அதற்கான நிர்வாக அனுமதி கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் ஆகிய இரண்டுக்கும், நகராட்சி நிர்வாகத் துறை அரசாணை பிறப்பித்து, நிர்வாக அனுமதி வழங்கியது.இதனால், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பிரச்னைகளுக்கு, இந்த நிதி ஒதுக்கீடு வாயிலாக விமோசனம் கிடைத்திருப்பதாக நகரவாசிகள் காத்திருக்கின்றனர்.ஆனால், இந்த இரு பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியும், நான்கு மாதங்களாக பணிகள் துவங்காததால், 637 கோடி ரூபாய்க்கான திட்ட பணிகள், தொடர்ந்து தாமதமாகி வருகின்றன.குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, கடந்த மார்ச் மாதம் மேயர் மகாலட்சுமி, எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன் ஆகியோர் பங்கேற்ற அடிக்கல் நாட்டு விழா செவிலிமேட்டில் நடந்தது.இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, நான்கு மாதங்களாகியும், பணிகள் துவங்காததால் தாமதமாகி வருகின்றன.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:குடிநீர் பணிகளை பொறுத்தவரை 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. அடுத்து வரும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து, பணி ஆணை வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கிவிடும். பாதாள சாக்கடை திட்ட பணிகளை பொறுத்தவரையில், திட்ட தொகையில், 'டெண்டர்' எடுத்த நிறுவனம், டெண்டர் தொகையைக் காட்டிலும் 16 சதவீதம் கூடுதலாக கேட்கிறது.அந்த தொகையை மாநகராட்சி சார்பில் கொடுக்க முடியாது. எனவே, ஒப்பந்த நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். அவர்கள் கேட்கும் கூடுதல் தொகையை கொடுத்தால், மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்படும்.எனவே, அவர்களிடம் பேசி, ஒப்பந்த தொகையை குறைத்து, அதன்பின் பணி ஆணை வழங்கியவுடன் பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

7,000 வீடுகளுக்கு குடிநீர்இணைப்பு இல்லை!

காஞ்சிபுரம் மாநகராட்சி 36 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இதில், 51 வார்டுகளும், 1,008 தெருக்களும் உள்ளன. இதில், 2.32 லட்சம் பேர் வசிக்கின்றனர். மொத்தம், 21,000 பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. நகர் முழுதும் 2,800 பாதாள சாக்கடை ஆள் இறங்கும் தொட்டிகள் உள்ளன. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் 13 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளன. அந்த பகுதிகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோல், புதிய குடிநீர் திட்டம் வாயிலாக, மொத்தமுள்ள 14,000 குடியிருப்புகளில், 7,000 குடியிருப்புகளுக்கு இதுவரை குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு, 89 லிட்டர் வீதம் கணக்கிட்டு, மாநகராட்சி குடிநீர் வழங்கி வருகிறது. இப்புதிய திட்டம் மூலம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ