சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி பள்ளி மாணவ - மாணவியர் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி ஏற்படுத்தி தர, மாணவ - மாணவியர் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில், மாணவ - மாணவியரின் சைக்கிள் நிறுத்துவதற்கு கூரை வசதி இல்லை. இதனால், மாணவ - மாணவியர், தங்களது சைக்கிளை பள்ளி திறந்தவெளியில் நிறுத்துகின்றனர். நாள் முழுதும் வெயிலில் நிற்கும் சைக்கிளில், 'டியூப்'கள் வெடிப்பதாகவும், ஏற்கனவே பஞ்சர் ஒட்டப்பட்ட இடத்தில், காற்று வெளியேறுவதாகவும், 'வால் டியூப்'பில்' ஓட்டை ஏற்படுவதாகவும் மாணவ - மாணவியர் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது சைக்கிள் பழுதடைந்து இருப்பதால், மாணவ - மாணவியர் வீட்டிற்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது. மழைகாலத்தில் சைக்கிள் துருப்பிடித்து பழுதடையும் நிலை உள்ளது. எனவே, சைக்கிளை பாதுகாக்கும் வகையில், அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி ஏற்படுத்தி தர மாணவ - மாணவியர் வலியுறுத்தி வருகின்றனர்.