உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வாகனம் மோதி சாய்ந்த சிக்னல் கம்பம் பஞ்சுபேட்டையில் விபத்து அபாயம்

 வாகனம் மோதி சாய்ந்த சிக்னல் கம்பம் பஞ்சுபேட்டையில் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெருவில், வாகனம் மோதியதில் சாய்ந்த நிலையில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ள தானியங்கி சிக்னல் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து வெள்ளைகேட், அரக் கோணம், திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஒலிமுகமதுபேட்டை, பஞ்சுபேட்டை வழியாக சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையுடன், பஞ்சுபேட்டை பெரிய தெரு இணையும் இடத்தில், விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், போலீஸ் நிர்வாகம் சார்பில், சோலார் மின்சாரத்தில் இயங்கும், தானியங்கி போக்குவரத்து சிக்னல் விளக்கு கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு, அதில், 'சிசிடிவி' கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் இச்சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 'சிசிடிவி' பொருத்தப்பட்டுள்ள சிக்னல் விளக்கு கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. ஊசலாடும் நிலையில் உள்ள சிக்னல் கம்பம் முற்றிலும் சாய்ந்து விழுந்தால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், இப்பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவம் நடந்தாலும், குற்ற செயலில் ஈடுபட்டு தப்பி செல்வோரை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, வாகனம் மோதி சேதமடைந்த நிலையில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ள சிக்னல் மின்கம்பத்தை சீரமைக்க, போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்