தடுப்புகள் இல்லாத சிறுபாலம் மாமண்டூரில் விபத்து அபாயம்
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் -- வந்தவாசி நெடுஞ்சாலை 38 கிலோ மீட்டர் தூரம் உடையது. இந்த சாலையை பயன்படுத்தி, காஞ்சிபுரம், வந்தவாசி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு, தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.அதேபோல, சுற்றுவட்டார 300க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், இச்சாலையின் வழியாக மாங்கால் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்கின்றனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் -- வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள மாமண்டூர் பகுதியில் சிறுபாலம் உள்ளது. இந்த சிறுபாலத்தில், தடுப்புகள் ஏதும் இல்லாமல் உள்ளது.இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் நிலைத்தடுமாறி, கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சிறுபாலத்தில் தடுப்புகள் அமைக்க, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.மேலும், சிறுபாலத்தின் வழியே இரவு நேரங்களில் முன்னே செல்லும் வாகனத்தை முந்தி செல்ல முயலும்போது, வாகன ஒட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, சிறுபாலத்தின் மீது தடுப்புகள் அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.