காஞ்சியில் சின்னம்மை, தாடை அம்மை நோய்கள்...பரவுது: அச்சமடைய தேவையில்லை என்கிறது சுகாதாரத்துறை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடைக்காலத்தில் பரவும் சின்னம்மை, தாடை அம்மை நோய்கள் பலருக்கும் பரவுகிறது. வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் இந்த நோய்கள் பற்றி அச்சமடைய தேவையில்லை என, சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அன்றாடம், 95 - 100 டிகிரி பாரன்ஹீட் வரைக்கும் வெயில் நிலவுகிறது. இதனால், ஹீட் ஸ்டோக் போன்ற கோடைக்கால நோய் மட்டுமல்லாமல், வைரஸ் தொற்று காரணமாக பரவும் அம்மை நோய்களும் பரவுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு மாதமாகவே, அம்மை நோய் பலருக்கும் வேகமாக பரவுகிறது. சிறியவர்கள், பெரியவர்கள் என, அனைத்து தரப்பினருக்கும் சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி எனப்படும் தாடை அம்மை ஆகியவை காணப்படுகிறது.இரண்டு வகையான அம்மை நோய்களும் பரவலாக காணப்படுவதால், வீட்டிலேயே பலரும் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். சிலர் கோவில்களில் தீர்த்தம் பெற்று, தனிமைபடுத்தி கொள்கின்றனர்.சிலர், மருத்துவமனைகளுக்கு சென்று மருந்துகளை வாங்கி சாப்பிட்டு சிகிச்சை எடுக்கின்றனர். சிலர் எந்தவித சிகிச்சைகளும் எடுக்காமல் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்கின்றனர்.டெங்கு, கொரோனா போன்று உயிரை பறிக்கும் நோய்கள் இவை இல்லாததால், பாதிக்கப்பட்டோர் தொடர்பான புள்ளி விபரங்களை தீவிரமாக சேகரிப்பது போல், அம்மை பாதித்தோர் விபரங்களை தீவிரமாக சுகாதாரத்துறை சேகரிப்பதில்லை. பெரிய பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதால், எத்தனை பேர் பாதித்துள்ளனர் என்பது பற்றி துல்லிய தகவல்கள் சுகாதாரத் துறையிடம் இல்லை.காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோவிலில் அம்மை பாதித்த பலர், கோவிலிலேயே தங்கியபடி, சிகிச்சை எடுத்து வருகின்றனர். குணமான பின், கோவிலில் இருந்து வீடு திரும்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கோவிலில் தற்போது பலரும் தங்கி சிகிச்சை எடுக்கின்றனர்.அம்மை நோய்களால் பயப்பட வேண்டியதில்லை என, சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. இருப்பினும், மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுக வேண்டும் என்கின்றனர்.சின்னம்மை என்பது ஒரு வைரஸ் தொற்றாகும். இது உடலில் காய்ச்சல் மற்றும் புள்ளிகளுடன்கூடிய தோல் அரிப்பு போன்ற அறிகுறிகளை கொண்டது. 'வேரிசெல்லா ஜாஸ்டர்' எனும் வைரஸ் கிருமி வாயிலாக சின்னம்மை நோய் ஏற்படுகிறது.உடலில் வைரஸ் நுழைந்தவுடன், அதன் அறிகுறிகள் 10லிருந்து 21 நாட்களுக்குள் தென்பட ஆரப்பித்து பின், 5 முதல் 10 நாட்கள் வரை சின்னம்மை தொற்று நீடிக்கும்.தோல் அரிப்பு தோன்றுவதற்கு முன்பாக, தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன், சிறிய திரவம் நிரப்பப்பட்ட கொப்புளங்களாக மாறும், இறுதியாக அவை பட்டையாகவும் மற்றும் தழும்பாகவும் மாறுகிறது.ஆரோக்கியமான குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சின்னம்மைக்கு மருத்துவ சிகிச்சைகள் தேவையில்லை.இணை நோய் உள்ளவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு சிகிச்சை அவசியம் என, சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.'மம்ப்ஸ்' என்ற வைரஸ் வாயிலாக பரவும் பொன்னுக்கு வீங்கி எனப்படும் தாடை அம்மை நோயானது காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.உமிழ்நீர் சுரப்பிகளில் வீக்கம் உருவாவதால் கடுமையான வலி, காய்ச்சல் ஏற்படுகிறது. அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் இருக்கும்.இவ்வகை வைரஸ், பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீர் வாயிலாக, மற்றவர்களுக்கும் பரவும். ஒரு வாரத்தில் இருந்து 14 நாட்களுக்குள் உடலுக்குள் வைரஸ் ஊடுருவி, அறிகுறிகளை வெளிப்படுத்தும்.இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்றாலும், நோய் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி இருந்தாலே, பாதிப்பு சரியாகும் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி செந்தில் கூறியதாவது:பள்ளிகள் விடுமுறை என்பதால் பெரிய அளவில் பரவுவதாக தெரியவில்லை. மருத்துவமனை, கோவில்களில் இருந்து கூட எங்களுக்கு ரிப்போர்ட் கொடுக்கின்றனர். ஆனால், கும்பலாக பரவுவதாக இல்லை. ஆங்காங்க சிலருக்கு வருகிறது. வைரஸ் தொற்று காரணமாக அம்மை நோய்கள் வருகிறது. தனிமைபடுத்திக் கொண்டு, நீர்ச்சத்து பொருட்டுகள் எடுத்துக்கொண்டாலே சரியாகிவிடும். அம்மை பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து மற்றவர்கள் விலகி இருக்க வேண்டும். காற்று வாயிலாக பரவும். அனைத்து மருத்துவமனைகளிலும், அம்மை நோய்களுக்கான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. கோடைக்காலத்தில் அம்மை பாதிப்பு வருவது இயல்பானது தான்.இவ்வாறு அவர் கூறினார்.