திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதால் மண் மலடாகும் அவலம்
உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்தூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் 274 ஊராட்சிகளில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தின் வாயிலாக, ஊராட்சிகளின் தெருக்களில் குப்பை குவிவதை தடுக்கவும், குப்பை தொட்டி வைத்து அதை தரம் பிரித்து மறுசுழற்சி செய்வது பிரதான நோக்கமாக இருந்து வருகிறது.இதற்காக, ஒவ்வொரு ஊராட்சியிலும் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று மட்கும் குப்பை, மட்கா குப்பை என தரம் பிரித்து பெற்று வருகின்றனர்.தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா, 2 லட்சம் ரூபாய் வீதம் 5.4 கோடி மதிப்பில் குப்பை தரம் பிரிக்கும் கொட்டகை அமைக்கப்பட்டு, அதன் அருகே குப்பை தரம் பிரித்து கொட்ட குழிகளும் தோண்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டம் நடைமுறையில் இருந்தாலும் அதன் செயல்பாடுகள் முடங்கி உள்ளன. அனைத்து ஊராட்சியிலும் உள்ள குப்பை தரம் பிரிக்கும் கொட்டகை மற்றும் குழிகளில் குப்பை நிரம்பி உள்ளது.இதை மறுசுழற்சி செய்ய, ஊராட்சி நிர்வாகங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளன. இதனால், தினமும் ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பையை ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே கொட்டிவிட்டு செல்கின்றனர்.இவ்வாறு கொட்டப்படும் குப்பையால் நீர் மாசடைந்து வருகிறது. பல இடங்களில் குப்பையை திறந்தவெளியில் கொட்டி எரிப்பதால் காற்றும் மாசடையும் சூழல் உள்ளது.அதிலும் குறிப்பாக, பிளாஸ்டிக் குப்பையை மேய்க்கால் புறம்போக்கு, வனப்பகுதிகளில் கொட்டுவதால் மண் மலட்டு தன்மை அடைகிறது. மேலும், பிளாஸ்டிக் குப்பையை கால்நடைகள் சாப்பிடுவதால் அவை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு வரை செல்கிறது.திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தாமல் இருப்பதால், குப்பை பிரிக்கும் கொட்டகை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் இத்திட்டத்தின் செயல்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த போதிய தூய்மை பணியாளர்கள் இல்லாமல் உள்ளனர். இதில், தூய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளம் 2,500 என்பதால், பலரும் இந்த வேலைக்கு வர முன்வருவதில்லை.இதனால், குப்பை சேகரிக்கப்பட்டு அதை தனித்தனியாக தரம் பிரிக்க போதிய தொழிலாளர்கள் இல்லாததால், குப்பையை நீர்நிலை மற்றும் மேய்க்கால் புறம்போக்கு ஆகிய பகுதிகளில் கொட்டப்படுகிறது.தற்போது, மட்கும் குப்பையை வைத்து உரம் தாயாரிக்கும் பணியும் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், விவசாயத்திற்கும் இயற்கை உரங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் குப்பையை தரம் பிரித்து வழங்க, அவ்வப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.தூய்மை பணியாளர்களுக்கு 300 வீடுகளுக்கு ஒரு குப்பை சேகரிக்கும் மூன்று சக்கர வாகனம் மற்றும் பேட்டரி வாகனம் ஆகியவை வழங்கப்பட்டு, குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது.அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரிப்பதற்கான பயிற்சியும் தூய்மை பணியாளர்களுக்கு அடிக்கடி வழங்கப்பட்டு வருகிறது.மேலும், குப்பை தரம் பிரிக்கும் கொட்டகை மற்றும் குழிகளில் தேங்கியுள்ள குப்பையை விரைவாக தரம் பிரித்து பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.