ஏகாம்பரேஸ்வரர் கோவில் புதுப்பிக்க நடவடிக்கை
வாலாஜாபாத்:வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்ட தம்மனுாரில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், இரண்டு கால பூஜை நடக்கிறது.இக்கோவில் முறையாக பராமரிக்கப்படாததால், கட்டடம் பழுதடைந்து நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது. மேலும், கோவில் மண்டபத்திற்குள் மழைநீர் கசிந்து வருகிறது. விமான கோபுரமும் மிகவும் சிதிலமடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது.சிதிலமடைந்த இக்கோவிலை புதுப்பிக்க, அப்பகுதி வாசிகள் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, கோவிலை புதுப்பிக்க அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து, தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவை சேர்ந்த தேவராஜன் கூறியதாவது:இக்கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, அறநிலையத்துறை நடவடிக்கையின் பேரில், கோவில் புனரமைப்பு பணிக்கு முதற்கட்டமாக, 87 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கோவிலில் பாலாலயம் செய்து திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினர்.