காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு ஆதரவாக கமிஷனர் செயல்படுவதை கண்டித்து, கவுன்சிலர்கள் அவரது அறையை முற்றுகையிட்டு, 'கெரோ' செய்தனர். தொடர்ந்து, மேயரை எதிர்த்து மாநகராட்சி வளாகத்தில் பந்தல் போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, துணை மேயர் குமரகுருநாதன் உட்பட தி.மு.க., -- அ.தி.மு.க., என, 33 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கேட்டு, கலெக்டர் கலைச்செல்வி மற்றும் கமிஷனர் செந்தில்முருகன் ஆகியோரிடம் மனு அளித்தனர்.வரும் 29ம் தேதி, மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் மற்றும் அவர் பதவி மீதான ஓட்டெடுப்பும் நடக்க உள்ளது.இது ஒருபுறம் இருக்க, மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் செந்தில்முருகனிடம், தாங்கள் அளித்த ராஜினாமா கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி கேட்க, தி.மு.க., -- அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நேற்று மதியம் 1:00 மணிஅளவில் சென்றுள்ளனர்.அப்போது, கமிஷனருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, கமிஷனரின் அறையை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டனர். மேயருக்கு ஆதரவாக கமிஷனர் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினர்.அதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்திலிருந்து கமிஷனர் செந்தில்முருகன் புறப்பட்டு சென்றார். துணை மேயர் குமரகுருநாதன், தி.மு.க., -- அ.தி.மு.க., - சுயேட்., கவுன்சிலர்கள், 20 பேர், மாநகராட்சி வளாகத்தில் பந்தல் போட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி வளாகமே பரபரப்பாக காணப்பட்டதால், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.தகவலறிந்த கலெக்டர் கலைச்செல்வி, மாநகராட்சியில் நடக்கும் போராட்டம் மற்றும் கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்த, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ஆகியோரை நேரில் அனுப்பினர்.அவர்கள், மாநகராட்சி அலுவலகத்திற்கு மாலை சென்று, அலுவலகத்தில் இருந்த மாநகராட்சி பொறியாளர் கணேசனிடம் இதுகுறித்து பேசினர். அப்போது, கவுன்சிலர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டு, நம்பிக்கையில்லா தீர்மான விவகாரம் உள்ளிட்டவை குறித்து, இருவரிடமும் தெரிவித்துள்ளார்.அலுவலகத்திலிருந்து வெளியே வந்த கோட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் வழங்கல் அலுவலர் பாலாஜி ஆகிய இருவரும், கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்தினர்.உங்களின் போராட்ட விபரம், கமிஷனர் மீது கவுன்சிலர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டு ஆகியவற்றை கலெக்டரிடம் தெரிவிப்பதாக கூறி சென்றனர்.இதையடுத்து, கவுன்சிலர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தர்ணா போராட்டம் இரவிலும் தொடர்ந்தது.
போராட்டத்திற்கான காரணம்
1இரண்டாவது மண்டல குழு தலைவர் சந்துருவை பதவி நீக்க வேண்டும் என, 7 கவுன்சிலர்கள், கமிஷனரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். ஆனால், 5ல் மூன்று பங்கு என, 8 கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்திருக்க வேண்டும் என, மாநகராட்சி சட்ட பிரிவுகளை சுட்டிகாட்டி, கவுன்சிலர்களுக்கு கமிஷனர் செந்தில்முருகன் பதில் அளித்துள்ளார். அதற்கு, கமிஷனர் தெரிவித்துள்ள காரணங்கள் ஏற்புடையதல்ல எனக்கூறி, 7 கவுன்சிலர்களும் கமிஷனருக்கு பதில் அளித்துள்ளனர்.2 கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட மாநகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். வருகை பதிவேட்டில் கூட்டத்திற்கு வரவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் எழுதியதற்கு பதிலாக, புறக்கணிப்பு என எழுதியிருக்க வேண்டும் என அதிருப்தி கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.3 சுகாதாரம், கணக்கு, நிதி உள்ளிட்ட நிலைக்குழுக்களில் உறுப்பினர்களாக இருந்த, 14 கவுன்சிலர்கள், தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து, கமிஷனர் செந்தில்முருகனிடம் சில நாட்கள் முன்பாக கடிதம் கொடுத்துள்ளனர். அந்த ராஜினாமா கடிதங்கள், கமிஷனருக்கு பதிலாக மேயரிடம் தான் கொடுத்திருக்க வேண்டும் எனவும், மீண்டும் மேயரிடம் கடிதம் கொடுக்க வேண்டும் என, கவுன்சிலர்களுக்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடிதம் கொடுத்த கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.