நீரில் மூழ்கிய வயலில் நெல் முளைத்து நாற்றாக வளரும் அவலம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 15,000 ஏக்கருக்கு மேல், பின் சொர்ணவாரி பருவத்தில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். அவை, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.ஒரு வாரமாக லேசான மழை பெய்து வருகிறது. இதில், கொட்டவாக்கம் ஊராட்சி வரதாபுரம், சிறுவள்ளூர், காரை ஊராட்சி, சீயட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கின.நீரில் மூழ்கிய நெற்கதிர் வயலில் இருந்து மழைநீரை வெட்டி எடுக்கும் பணியில் விவசாயிகள் இறங்கி உள்ளனர். இருப்பினும், நீர் வடிந்த நெல் வயலில் நெல் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, பெரியகரும்பூர், புதுப்பாக்கம் ஆகிய கிராமங்களில், விவசாயிகளின் வயல்களில், நெல் முளைத்து நாற்றாக வளர்ந்து வருகிறது.இதுகுறித்து, பெரியகரும்பூர் கிராம விவசாயிகள் கூறியதாவது:பள்ளமாக இருக்கும் நிலங்களில், தண்ணீர் வெளியேற வழியின்றி நெல்லில் முளைப்பு நாற்றாக வளர்ந்துள்ளன.மழையால் மகசூல் இல்லை என, நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.