| ADDED : ஜன 02, 2024 10:36 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் மற்றும் நுாலகத் துறையின் பொது நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் என, மொத்தம் 60 லட்சம் ரூபாய் செலவில், நேரு கிளை நுாலகம் கட்டப்பட்டது.கட்டுமானப் பணி முடிந்து ஓராண்டிற்கு மேலாகியும் திறக்கப்படாமல் இருந்த நுாலகத்தை, கடந்த மாதம் 22ல், காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.எல்.ஏ., எழிலரசன் திறந்து வைத்தார்.இங்குள்ள தினசரி, வார, மாதாந்திர இதழ்களை வாசிக்கவும், டி.என்.பி.எஸ்.சி., அரசு போட்டி தேர்வு எழுதுவோர் பல்வேறு நுால்களில் இருந்து குறிப்பு எடுப்பதற்கு என, தினமும் நுாற்றுக்கணக்கான வாசகர்கள் வந்து செல்கின்றனர்.நுாலகத்தில் ஊழியர்கள் மட்டுமின்றி வாசகர்களின் தாகம் தீர்க்க குடிநீர் வசதி இல்லை. நுாலகத்திற்கு வந்து வாசகர்களின் அறிவுப்பசியை போக்கும் நுாலகம், தாகத்தால் தவிக்கும் வாசகர்களின் தாகத்தை தீர்க்க முடியாத நிலை உள்ளது.எனவே, நுாலகத்திற்கு வரும் வாசகர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில், குடிநீர் வசதி ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.