சாலையில் டூ -- வீலர்கள் ‛பார்க்கிங் நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் 'பார்க்கிங்' செய்யப்படும் இருசக்கர வாகனங்களால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சிகிச்சை பெறுவதற்காகவும் தினமும், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும், உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரை பார்ப்பதற்காகவும் திரளானோர் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். மருத்துவமனைக்கு இருசக்கர வாகனங்களில் வருவோரின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ப, மருத்துவமனை வளாகத்தில் போதுமான 'பார்க்கிங்' வசதி இல்லை. இதனால், தங்களது வாகனங்களை மருத்துவமனைக்கு வெளியே உள்ள ரயில்வே சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக 'பார்க்கிங்' செய்துவிட்டு செல்கின்றனர். இதனால், சாலையின் அகலம் வெகுவாக குறைந்துள்ளதால், சாலையோரம் நடந்து செல்ல வேண்டிய பாதசாரிகள் சாலையின் மையப்பகுதியில் நடந்து செல்வதால், விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும், இப்பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், உயிருக்கு போராடுவோரை அழைத்து வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வெளியே ரயில்வே சாலையோரம் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கவும், மருத்துவமனை வளாகத்திற்குள், கூடுதல் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.