திம்மராஜம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை
வாலாஜாபாத்: காஞ்சிபுரம் - செங்கல் பட்டு சாலையில், பயணியர் நிழற்குடை புதியதாக கட்டமைத்தபோது அதனுடன் இணைத்து கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட கழிப்பறை கட்டடங்கள் பயன்பாட்டிற்கு விட கோரிக்கை எழுந்து உள்ளது. சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடம் திட்டம் சார்பில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இப்பணிகள் மேற்கொண்ட போது, சாலை விரிவாக்கம் செய்த பேருந்து நிறுத்தங்களில், சாலையோரங்களில் இருந்த பயணியர் நிழற்குடை கட்டடங்கள் அகற்றம் செய்யப்பட்டன. பின் விரிவாக்கப் பணி முடிவுற்றதும் அகற்றம் செய்த நிழற்குடை கட்டடங்களுக்கு மாறாக புதிய பயணியர் நிழற்குடை கட்டடங்கள் ஏற்படுத்தப் பட்டன. இதில், குறிப்பிட்ட இடங்களில், அதாவது அதிக அளவிலான பயணியர் வருகை தரும் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் கழிப்பறை வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது, திம்மராஜம் பேட்டை பேருந்து நிறுத்தத்தில் கழிப்பறை கட்டட பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில், நிழற்குடை கட்டடத்தை பயணியர் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், கழிப்பறை கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே உள்ளது. எனவே, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில், பயணியர் நிழற்குடையுடன் கட்டமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.