அய்யன்பேட்டை குளம் சீரமைக்க வலியுறுத்தல்
அய்யன்பேட்டை:வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள அய்யன்பேட்டை குளம், அப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகிறது. செடி, கொடிகள் வளர்ந்துள்ள இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, வாலாஜாபாத் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், கடந்த 2020 - -21ம் ஆண்டு, 21.37 லட்சம் ரூபாய் செலவில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டது.அதன்பின், முறையான பராமரிப்பு இல்லாததால், அய்யன்பேட்டை குளத்தில் செடி, கொடிகள் மீண்டும் வளர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இங்கு தஞ்சம் புகும் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. எனவே, அய்யன்பேட்டை குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.