அய்யன்பேட்டை குளம் சீரமைக்க வலியுறுத்தல்
அய்யன்பேட்டை:கோரைப்புல் வளர்ந்துள்ள அய்யன்பேட்டை குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், அய்யன்பேட்டை குளம் அப்பகுதி நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. செடி, கோரைப்புல் வளர்ந்துள்ள இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, வாலாஜாபாத் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், 2020- - 21ம் ஆண்டு, 21.37 லட்சம் ரூபாய் செலவில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், அய்யன்பேட்டை குளத்தில், கோரைப்புல், செடி, மீண்டும் வளர்ந்துள்ளது. இதனால்,செடிகளுக்கு மத்தியில் தஞ்சமடைந்துள்ள பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. எனவே, அய்யன்பேட்டை குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.