கருப்பு சட்டை, பேட்ஜ் அணிந்து பணியாற்றிய வி.ஏ.ஓ.,க்கள்
-- -நமது நிருபர் குழு- -காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், கடந்த 13ல் காஞ்சிபுரத்தில் நடந்த வருவாய் துறை கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களை அடங்கல் அபீசர் என்றும், கிராம நிர்வாக அலுவலர்கள் எந்த வேலையும் செய்வதில்லை என்றும், கலெக்டர் கலைச்செல்வி பேசியதாக கிராம நிர்வாக அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.இதனால் அதிருப்தியடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பேட்ஜ், கருப்பு சட்டை அணிந்து தங்களது அலுவலகங்களில் நேற்று பணியாற்றினர்.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், உத்திரமேரூர் வட்டக்கிளை சார்பில், சங்க வட்ட செயலர் செல்வக்குமார் தலைமையில், கலெக்டரை கண்டித்து, தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மனு அளித்தனர். வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட செயலர் புருஷோத்தம்மன் தலைமையில், வி.ஏ.ஒ.,க்கள் குழுவாக ஒன்றிணைந்து மனு அளித்தனர்.மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை தினங்களிலும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தவிர இதர பணிகளை மேற்கொள்வதில்லை எனவும் தீர்மானித்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.