காஞ்சிபுரம்: வாரணாசியில் இருந்து, 'காசி தமிழ் சங்கமம் -- 4.0, தமிழ் கற்போம்' திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் சங்கரா பல்கலை மற்றும் சங்கரா கல்லுாரிக்கு வந்துள்ள மாணவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு கள பயணம் மேற்கொண்ட-னர். உத்திரபிரதேச மாநிலம் 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சியின் நிறைவாக, வாரணாசி மாணவர்களுக்கு தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தை கற்பிக்க முடிவு செய்யப்பட்டு, அங்கிருந்து, 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாணவர்கள், 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, புதுச்சேரி, காந்தி கிராமம், சாஸ்த்ரா, காஞ்சிபுரம் சங்கரா பல்கலை கழகத்திற்கு 30 மாணவர்கள், சங்கரா கல்லுாரிக்கு 30 மாணவர்கள் அனுப்பப்பட்டனர். சங்கரா பல்கலையில், இம்மாணவர்களுக்கு 'தமிழ் கற்கலாம்' என்ற 10 நாள் திட்டத்தில், சென்னை ஐ.ஐ.டி., இணைபதிவாளர் கருணாகரன், பல்கலை துணைவேந்தர் சீனிவாசு ஆகியோர், மாணவர்களுக்கு காசி, காஞ்சி தொடர்புடைய செய்திகளை எடுத்துரைத்தனர். காஞ்சியில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கும் இக்குழுவினர் களப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர் நேற்று காலை ஏகாம்பரநாதர் கோவிலுக்கு களப்பயணம் மேற்கொண்டனர். சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் பேராசிரியர் காமகோடி, காசி தமிழ்ச் சங்க மாணவர்களுடன் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் பாரம்பரியம் குறித்து கலந்துரையாடினார். இதில், மாணவர்கள் தங்களை தமிழில் அறிமுகப்படுத்தி கொண்டதுடன், அகர முதல என தொடங்கும் திருக்குறளை கூறினர். நிகழ்ச்சியில் சார்பு துணை வேந்தர் வசந்தகுமார் மேத்தா, பம்பல் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் சங்கரா கல்லுாரிக்கு வந்துள்ள, 30 மாணவர்கள் உத்திரமேரூர் கல்வெட்டு கோவில், திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு களப்பயணமாக சென்றனர்.