| ADDED : டிச 26, 2025 06:00 AM
காஞ்சிபுரம்: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து, 'காசி தமிழ் சங்கமம் -- 4.0; தமிழ் கற்போம்' திட்டத்தின் கீழ் தமிழகம் வந்துள்ள மாணவர்களுக்கு, நேற்று முன்தினம், காஞ்சிபுரம் சங்கரா கல்லுாரியில் பயிலரங்கம் நடந்தது. 'காசி தமிழ் சங்கமம் - 4.0' நிகழ்ச்சியின் நிறைவாக, உ.பி., மாநிலம், வாரணாசி மாணவர்களுக்கு தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தை கற்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாணவர்கள், 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, புதுச்சேரி, காந்தி கிராமம், சாஸ்த்ரா, காஞ்சிபுரம் சங்கரா கல்லுாரி உள்ளிட்ட பல கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டனர். இதில், காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு வந்துள்ள 30 மாணர்களுக்கான பயிலரங்கம் நேற்று முன்தினம் கல்லுாரியில் நடந்தது. இதில், தமிழக விழாக்கள் மற்றும் பண்பாடு என்ற தலைப்பில், டாக்டர் சுதா சேஷய்யன் பேசினார். முன்னதாக, மாணவர்கள் தங்களின் பெயரை தமிழில் எழுதி, தங்களின் மொழி ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், சங்கரா கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன், தமிழ் துறை தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.