உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குப்பை கொட்டுமிடமாக மாறும் நீர்நிலைகள்...நிதியில்லாமல் என்ன செய்றது?: அரசு மீது பழிபோட்டு தப்பிக்கும் மாநகராட்சி

குப்பை கொட்டுமிடமாக மாறும் நீர்நிலைகள்...நிதியில்லாமல் என்ன செய்றது?: அரசு மீது பழிபோட்டு தப்பிக்கும் மாநகராட்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஏரிகள், குளம் போன்ற 79 நீர்நிலைகள் பராமரிப்பு இல்லாமல், கழிவுநீர் குட்டையாகவும் , குப்பை கொட்டுமிடமாகவும் மாறி வருகின்றன. சீரமைக்க வேண்டிய மாநகராட்சியோ, '20 நீர்நிலைகளை சீரமைக்க, 89 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். அரசிடம் இருந்து நிதி வரவில்லை; நாங்க என்ன செய்ய முடியும்' என, கைவிரிக்கிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின் கீழ், 51 வார்டுகள் உள்ளன. இதில், அல்லாபாத் ஏரி உட்பட, குளம், குட்டை என, 79 நீர்நிலைகள் உள்ளன. இவற்றையும், இவற்றுக்கான நீர் வரத்து கால்வாய்களையும், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்து பராமரிக்க வேண்டும். ஆனால், நகரில் உள்ள பல குளம், குட்டைகள் பராமரிப்பின்றி கழிவுநீர் தேங்கும் குட்டையாகவும், குப்பை கிடங்காகவும் மாறி, மிக மோசமான நிலையில் உள்ளன. மழைநீர் கால்வாய்கள் பல ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக, நகர மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். செவிலிமேடு பகுதியில் உள்ள பொது குளம், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு, 10 ஆண்டுகள் முன் வரை பயன்பட்டு வந்துள்ளது. அருகில் வீட்டு மனைகள் அதிகரித்த நிலையில், குளத்திற்குள் கழிவுநீர் விடுவது, ஆக்கிரமிப்பு செய்வது போன்ற செயல்பாடுகள் அதிகரித்ததால், குளத்தின் தன்மையே மாறிவிட்டது. அதேபோல், ஒக்கப்பிறந்தான் குளத்தை, 2009ம் ஆண்டில், அண்ணா நுாற்றாண்டு நினைவாக சீரமைத்தனர். அந்த குளமும் பராமரிப்பின்றி மோசமாகியுள்ளது. நகரின் மையத்தின் உள்ள ரங்கசாமிகுளம் முழுதும் செடிகள் முளைத்து, பாழடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு நீர்நிலைகள் இதுபோல் மோசமான நிலையில் காணப்படுவதால், அருகில் வசிப்போரால் பயன்படுத்தக்கூட முடிவதில்லை. நகரில் உள்ள 79 நீர்நிலைகளில், 99 சதவீதம் நீர்நிலைகள் படுமோசமாக உள்ளன. தனியார் தொண்டு நிறுவனம் உதவியால், அல்லாபாத் ஏரி மட்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் நீர்நிலைகளை சீரமைப்பதற்கு நிதியில்லை என்ற காரணம் காட்டி கைவிரிக்கிறது. நகர எல்லைக்குள் உள்ள குளம், குட்டைகளை பராமரித்து பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், தன் பொறுப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாகவே, காஞ்சி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசு நிதிக்காக காத்திருக்கிறோம் இதுகுறித்து காஞ்சி மாநகராட்சி மேயர், மகாலட்சுமி கூறியதாவது; காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல குளங்கள் மோசமான நிலையில் உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன், 15 நீர்நிலைகளை சீரமைக்க, 70 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு திட்ட அறிக்கை சமர்ப்பித்தோம்; நிதி கிடைக்கவில்லை. பெருமாள் குட்டை உள்ளிட்ட 5 நீர்நிலைகளை சீரமைக்க, 19 கோடி ரூபாய் கேட்டு, மீண்டும் அரசுக்கு திட்ட அறிக்கை மாநகராட்சி நிர்வாகம், இரு மாதங்கள் முன்பாக அனுப்பி உள்ளது. அதற்கான நிதியும் இதுவரை கிடைக்கவில்லை. முடிந்த அளவு தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி, நீர்நிலைகளை சீரமைக்கிறோம்.அல்லாபாத் ஏரி போல், வெள்ளைக்குளத்தை சீரமைக்க தொண்டு நிறுவன உதவியை நாடியுள்ளோம். அரசிடம் இருந்து நிதி கிடைத்தால்தான், நீர்நிலைகளை சீரமைக்க முடியும்; நிதிக் காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை