குடிநீர் சுத்திகரிப்பு மையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காவனூர் புதுச்சேரி கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, குடியிருப்புகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறு மின்விசை குழாய் ஆகியவற்றின் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், மத்திய அரசு பொது நிதியின் கீழ், 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து, கடந்தாண்டு குடிநீர் சுத்திகரிப்பு மையம் கட்டும் பணி துவக்கப்பட்டது. கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.தற்போது, கோடை காலம் துவங்கி உள்ளதால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க, குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவர, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.