உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / கேரளாவில் கவிழ்ந்த கப்பலின் கன்டெய்னர் குளச்சலில் ஒதுங்கியது

கேரளாவில் கவிழ்ந்த கப்பலின் கன்டெய்னர் குளச்சலில் ஒதுங்கியது

நாகர்கோவில்:கேரள கடலில் கவிழந்த சரக்கு கப்பலின் கன்டெய்னரில் ஒன்று குளச்சல் அருகே கடலில் கரை ஒதுங்கியது. ஆப்ரிக்க நாடான லைபீரியாவை சேர்ந்த, 'எம்.எஸ்.சி., எல்சா 3' என்ற சரக்கு கப்பல், மே 24ல் கொச்சி அருகே நடுக்கடலில் கவிழ்ந்தது. அந்த கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் கடலில் மிதந்தன. இதில், 367.1 டன் சல்பர் எரிவாயு எண்ணெய், 84.4 டன் டீசல் இருந்தன.சில கன்டெய்னர்களில் கால்ஷியம் கார்பைட் என்ற ரசாயனமும் இருந்துள்ளது. இவை கடலில் கலந்தால் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என, எச்சரிக்கப்பட்டது.இதற்கிடையே, சில கன்டெய்னர்கள், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்ட கடற்கரையோரங்களில் ஒதுங்கி உள்ளன. இந்நிலையில், இந்த கப்பல் விபத்தை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது.எரிபொருள் மற்றும் ரசாயனங்கள் கடலில் கசிவது கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலோர வாழ்விடங்களில் நீண்டகால சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என, கடல்சார் நிபுணர்கள் எச்சரித்துள்ளதாலும், சில கன்டெய்னர்கள் கடலில் மிதந்து வருவது கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக கேரள அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களான இரவிப்புத்தன்துறை, பூத்துறை, இனையம், சின்னத்துறை, மண்டைக்காடு, கடியப்பட்டினம், தேங்காய் பட்டணம் கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்கள், பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கின.நேற்று காலை குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரை பகுதியில் ஒரு கன்டெய்னர் கரை ஒதுங்கியது.தீயணைப்பு படையினரும், கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகளும் அங்கு விரைந்தனர். இது கேரளாவில் மூழ்கிய கப்பலின் கன்டெய்னர் என கூறப்படுகிறது.இதை ஆய்வு செய்ய குஜராத்தில் இருந்து அதிகாரிகள் வர உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
மே 30, 2025 17:05

கரெக்ட். இங்கே தான் துறைமுகம் கட்டறதா இருந்தாங்க. துறைமுகம் இல்லாமலேயே பெட்டி வந்து இறங்கிரிச்சு. யாருக்கோ தூக்கம் போகப் போகுதோ?


புதிய வீடியோ