| ADDED : நவ 22, 2025 12:21 AM
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே 66 சவரன் நகைகள், 32 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதி தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் அருகே குருசடி பகுதியை சேர்ந்தவர் ராமநாத பிள்ளை, 56. இவரது மனைவி பத்மா, 50. அப்பகுதியை சேர்ந்த எலிசபெத் உட்பட பலரிடம் அதிக வட்டி தருவதாக கூறி, பணம் பெற்றனர். பின், தலைமறைவாகி விட்டனர். கடந்த 2005ல் எலிசபெத் உட்பட பலர், அவர்கள் மீது புகார் அளித்தனர். விசாரணையில், சிறிது சிறிதாக, 32 லட்சம் ரூபாய் மற்றும் 66 சவரன் நகைகளை மோசடி செய்தது தெரிய வந்தது. குற்றப்பிரிவு போலீசார், 2006ல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். ஆனால், அந்த தம்பதி தலைமறைவாக இருந்தனர். இவர்களுக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருந்த நிலையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு மற்றும் போலீசார் தெலுங்கானா மாநிலத்தில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து, நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.