UPDATED : ஜூலை 04, 2024 10:41 AM | ADDED : ஜூலை 02, 2024 06:40 AM
கரூர் : கரூர் அருகே, பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி தரக்கோரி, நேற்று பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சியில், முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. பழுதான காரணத்தால் கடந்த, 2021ல், கட்டடம் இடிக்கப்பட்டது. இதனால், உயர்நிலைப்பள்ளி வகுப்புகள் கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிக்கு அருகில் உள்ள, சமுதாய கூடத்தில் நடந்து வருகிறது. பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி தரக்கோரி பொதுமக்கள் வைத்த கோரிக்கையை, கல்வித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை, 10:00 மணிக்கு கரூர்பரமத்தி வேலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வேலாயுதம்பாளையம் போலீசார், வருவாய் துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, விரைவில் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, பொது மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.