| ADDED : ஆக 20, 2024 02:55 AM
கரூர்: கரூரில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது.ஆவணி மாத பவுர்ணமி திதியும், அவிட்ட நட்சத்திரமும் இணைந்து வரும் தினம் ஆவணி அவிட்டமாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் வேதங்கள் அவதரித்த நாளாகவும், மஹாவிஷ்ணு ஹயக்கிரீவராக அவதரித்த நாளாகவும், வேதங்களை அசுரர்களிடமிருந்து தேவர்கள் மீட்டதாக, புராணங்களில் சொல்லப்படுகிறது.கரூர், வேத சிவ ஆகம பாடசாலையில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணுால் மாற்றும் வைபவம் நேற்று நடந்தது. தர்ப்பணம் கொடுத்து, அதன் பின், காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து, புது பூணுால் மாற்றிக் கொண்டனர். * இதேபோல், கரூர் தெற்கு காந்தி கிராமத்தில் உள்ள ராமர் மடத்தில் பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது. * கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில், குண்டங்கள் அமைத்து ஹோமம் நடந்தது. மூலவர் சித்தி விநாயகர் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் காட்சியளித்தனர். திரிப்பூக்களால் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு நாமாவளிகள் கூறிய பின், சுவாமிக்கு துாப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. நுாற்றுக்கும் மேற்பட்ட விஸ்வகர்மா சமுதாயத்தினர் பூணுால் மாற்றிக்கொண்டனர்.