கரூர், நெரூர் விவசாய நிலம் அருகில் உள்ள சாலையில் டாஸ்மாக் கடையால் பெண்கள் உள்பட மக்கள் நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில், 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், நெரூர் தென்பாகம் பஞ்சாயத்துக்குட்பட்ட நெரூர்-வேடிச்சிபாளையம் சாலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு மனுக்கள் கொடுத்தும், தொடர்ந்து டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.இது குறித்து பா.ஜ., கரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணகுமார் கூறியதாவது; நெரூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வந்த, டாஸ்மாக் கடைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளை மீறி, 2022ல் மீண்டும் கடை திறக்கப்பட்டுள்ளது. கடையில் இருந்து குடித்து விட்டு வாகனங்களில் வருபவர்கள், விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. இங்குள்ள பாரில் மட்டுமின்றி, சாலையோரம் அமர்ந்து மது அருந்தி விட்டு, குடிமகன்கள் செய்யும் அடாவடியால், பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். மது பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்களை சாலையில் வீசுகின்றனர். சங்கிலி பறிப்பு போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின், புகலிடமாக டாஸ்மாக் கடை மாறியுள்ளது. சில நேரங்களில் அடிதடி சம்பவங்களும் நடக்கிறது. பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன், நடவடிக்கை எடுக்க வேண்டும்.கே:லோகாம்பாள், (நெரூர்): இந்த சுற்றுவட்டார பகுதியில், கோரை சாகுபடி நடக்கிறது. தினமும் பெண் விவசாய கூலி தொழிலாளர்கள் இங்கு பணி செய்து வருகின்றனர். குடித்து விட்டு காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை அருகில் உள்ள, விவசாய நிலங்களில் வீசி விட்டு செல்கின்றனர். கண்ணாடி மது பாட்டில்களை உடைத்து விளைநிலங்களில் போடுவதால் விவசாயிகள், கால்நடைகளின் கால்களை பதம் பார்க்கிறது. விவசாய நிலங்கள் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி கிடக்கிறது.கே.ஜெயந்தி, (சோமூர்): டாஸ்மாக் கடை அருகில், 300 மீட்டர் தொலைவில் அங்கன்வாடி மையம், 500 மீட்டர் தொலைவில் ஆர்.சி., அரசு உதவி பெறும் பள்ளி, விநாயகர் கோவில், சர்ச் ஆகியவை உள்ளன. பள்ளியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருவதால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் குடித்து விட்டு பள்ளி, அங்கன்வாடி மைய வளாகத்தில் பாட்டில்களை போட்டு செல்கின்றனர். மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று வரும் சாலையில் டாஸ்மாக் கடை அமைத்துள்ளது. இரவு, 7:00 மணிக்கு மேல் ஆண்களே சாலையில் செல்ல அச்சப்படும் நிலை உள்ளபோது, பெண்கள் எப்படி செல்வர். எனவே, டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி விவசாயிகள், பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.