கரூர்: கரூர் அருகே, பெருமாள் கோவிலில் யாகம் நடத்தியதால், தேனீக்கள் கடிக்கு ஆளான, ஆறு பேரை தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டனர்.கரூர் மாவட்டம், வாங்கலில் பெருமாள் கோவில் உள்ளது. அங்கு, நேற்று கும்பகோணம் பகுதியை சேர்ந்த சீனிவாச ராகவன், 85, அவரது மனைவி கவிதா, 81, தான்தோன்றி மலையை சேர்ந்த ஹரீஸ், 40, ராமகிருஷ்ணன், 62, செல்லமாள், 70, சுப்பிரமணி, 58, ஆகியோர் யாகம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட புகை காரணமாக, கோவில் வளாகத்தில் இருந்த கூட்டில் இருந்த தேனீக்கள் பறந்து, சீனிவாச ராகவன் உள்ளிட்ட, ஆறு பேரையும் கடித்தது. தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையில் சென்று, கோவிலில் இருந்த, பக்தர்களுக்கு கவச உடை அணிவித்து வெளியே அழைத்து வந்தனர். பிறகு, ஆறு பேரும் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.