| ADDED : ஏப் 25, 2024 04:33 AM
கரூர்: கரூர் அருகே போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய, இரண்டு ரவுடிகளில் ஒருவர் மீது, இரண்டு கொலை வழக்குகள் உள்ளது என, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 22 இரவு நடந்தது. அப்போது, குடிபோதையில் இரண்டு ரவுடிகள் அரிவாளுடன் சென்று, பொதுமக்களிடம் தகராறு செய்துள்ளனர். பொதுமக்கள் இரண்டு பேரையும் பிடித்து, தர்ம அடி கொடுத்து, வேலாயுதம் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத்திடம் ஒப்படைத்தனர்.பிறகு இரண்டு ரவுடிகளும், தனியார் ஆம்புலன்ஸ் வேனில், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, போலீஸ் பாதுகாப்புடன் சென்ற போது தப்பி விட்டனர். தப்பி ஓடிய ஒருவன் பெயர் மதுரையை சேர்ந்த விக்கி, 28, என்பது தெரிய வந்தது. அவர் மீது தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த, இரண்டு கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், அரிவாளுடன் யாரை தாக்க விக்கி, தவிட்டுப்பாளையம் பகுதிக்கு வந்தார் என, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.