கரூர்:கரூர் மேலக்கரூர், சார் - பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர், போலியான ஆவணங்கள் தயாரித்து, 22 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்து கொண்டதாக, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், செல்வராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன், ஷோபா உள்ளிட்ட, ஏழு பேர் மீது ஜூன், 9ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.நேற்று காலை தாளப்பட்டி கூலி நாயக்கனுாரில் உள்ள யுவராஜ் வீடு, தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ் வீடு, செங்கல் சூளை, பத்திரப்பதிவின் போது, சாட்சி கையெழுத்து போட்ட ஈஸ்வரமூர்த்தியின் கவுண்டன்புதுார் வீடு ஆகிய இடங்களில், சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி சி.பி.சி.ஐ.டி., போலீசார், சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்.சி.பி.சி.ஐ.டி., சோதனைக்கு உள்ளான செல்வராஜ், தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., எம்.ஜி.ஆர்., மன்ற செயலராக உள்ளார். இவரும் யுவராஜும், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள்.சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வரும், இந்த வழக்கிலும், வாங்கல் போலீசார் விசாரித்து வரும் நிலமோசடி வழக்கிலும், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலருமான விஜயபாஸ்கர், முன் ஜாமின் கேட்டு, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோட்டை விட்டதா உளவுத்துறை?
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, மத்திய உள்துறை அமைச்சருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதனால், முதல்வர் ஸ்டாலினை நேற்று முன்தினம், தலைமைச் செயலகத்தில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பலர் சந்தித்து, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் தலைமையில் நன்றி தெரிவித்தனர்.அதில், கரூர் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் தேடப்பட்டு வரும் மாரப்பனும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள், நேற்று பத்திரிக்கையில் வெளியாயின. இதனால், மாரப்பன் குறித்து உளவுத்துறை போலீசார், முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.