குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியன் பகுதிகளில் வெள்ளரிக்காய் சாகுபடியை செய்து வருகின்றனர். இது குறித்து, முன்னோடி விவசாயிகள் கூறியதாவது:பருவத்திற்கு ஏற்ற தோட்ட பயிரான வெள்ளரியை பயிரிட்டால் அடுத்த, 50 நாட்களில் அறுவடை செய்து அதிகமான லாபம் பெற முடியும். கோ 1, ஜப்பானி லாங் கிரின், ஸ்ரோயிட் எய்ட், பாயின்செட்டி என பல்வேறு ரகங்கள் உள்ளன. அனைத்து வகையான மண்ணிலும் வளரும் தன்மை உடையது. ஜூன், செப்., டிச., மார்ச் மாதங்களில் சாகுபடி செய்யலாம்.வெள்ளரி சாகுபடியில் நிலத்தை 3 அல்லது 4 முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். அதன்பிறகு 1.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ., ஆழம், அகலம் மற்றும் நீளத்தில் குழிகளை அமைக்க வேண்டும். அதில் நன்றாக மக்கிய தொழு உரம், 10 கிலோ இட வேண்டும். இத்துடன், 100 கிராம் கலப்பு உரம் இட்டு மேல் மண் கலந்து நிரப்பி விதையை ஊன்ற வேண்டும்.ஒரு ஹெக்டேருக்கு, 2.5 கிலோ விதை தேவைப்படுகிறது. விதை ஊன்றுவதற்கு முன்னதாக ஒரு கிலோ விதைக்கு, 2 கிராம் பெவிஸ்டின் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு குழிக்கு 4 முதல் 5 விதைகளை ஊன்ற வேண்டும். விதை ஊன்றியவுடன் குடம் வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்னர், விதை முளைத்து செடி வளர்ந்தவுடன் வாய்க்கால் மூலமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.செடிகள் நன்றாக வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியான 25 பி.பி.எம்., என்ற மருந்தை, 10 லிட்டர் தண்ணீரில், 2.5 மில்லி கிராம் அளவில் கலந்து, இரண்டாம் இலை பருவத்தின் போது முதல் முறையாக தெளிக்க வேண்டும். இதேபோல் 7 நாட்கள் இடைவெளியில், 3 முறை தெளிக்க வேண்டும். விதை ஊன்றி, 50 நாட்களில் வெள்ளரிக்காய்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும்.அதன் பின், 8 முதல், 10 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்வதன் மூலமாக ஒரு ஹெக்டேருக்கு, 8 முதல், 10 டன் வரை வெள்ளரி காய்கள் மகசூல் பெற்று அதிகமான லாபம் பெறலாம்.இவ்வாறு கூறினர்.