கரூர்: நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் பங்களிப்பு செலுத்திய பின், சாலை அமைக்கும் பணியை தொடங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம், மூக்கனாங்குறிச்சி பஞ்சாயத்துக்குப்பட்ட வால்காட்டுப்புதுார் முதல், நத்தமேடு செல்லும் சாலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் டெக்ஸ்டைல், கட்டுமானம், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் கரூருக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். வால்காட்டுப்புதூர் முதல் நத்தமேடு வரை செல்லும் குண்டும், குழியுமாக உள்ள மண் சாலையை தார் சாலையாக அமைக்க நமக்கு நாமே திட்டத்தில், பொதுமக்கள் பங்களிப்பு அளித்தும் பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இது குறித்து, மா.கம்யூ.,கரூர் மாநகர குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பங்கு தொகையாக, 11 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய், மூக்கனாங்குறிச்சி பஞ்., உறுப்பினர், முருகேசன் தலைமையில் பொதுமக்கள் வசூல் செய்து கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு, டிச.,13ல் டி.டி., எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. பணம் செலுத்தி, ஐந்து மாதம் ஆகியும் புதிய தார்சாலை அமைக்காமல் பணியை கிடப்பில் போட்டுள்ளனர். இந்த சாலை வழியாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் உள்ள குழிகள் தெரியாமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். தெரு விளக்குகள் இல்லாததால், பெண்கள் இரவு நேரங்களில் மிகப்பெரிய அச்சத்துடனே சென்று வருகின்றனர். உடனியாக பணி தொடங்கவில்லை எனில், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு கூறினார்.