குளித்தலை, குளித்தலை அடுத்த குமாரமங்கலம் கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, பவுர்ணமி, அமாவாசை அன்று, கோவில் பூசாரி அருண் அருள் வாக்கு சொல்வது வழக்கம். தமிழகத்தில் பல மாவட்டத்தில் இருந்து பக்தர்கள், அருள்வாக்கு கேட்டு செல்கின்றனர். ஆண்டுதோறும் ஆடி அமாவாசையில் சிறப்பு பூஜை நடக்கிறது. அதன்படி, நேற்று குமாரமங்கலம் ரயில்வே கேட்டில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்தகுடம், அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதி வழியாக சென்று கருப்பண்ணன் சுவாமிக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தினர். தொடர்ந்து, மதியம் கருப்பண்ணன் சுவாமி, வேம்படி கருப்புசாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. அதன்பின், கோவில் பூசாரி அரிவாள் மேல் ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். கருர், திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.