உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிடா விருந்து வைக்க அரசு பள்ளியில் பந்தல் அமைப்பு கிராம மக்கள் எதிர்ப்பு

கிடா விருந்து வைக்க அரசு பள்ளியில் பந்தல் அமைப்பு கிராம மக்கள் எதிர்ப்பு

ப.வேலுார்:கோவில் திருவிழாவையொட்டி, கிடா விருந்து வைப்பதற்காக, அரசு பள்ளியில் அனுமதியின்றி பந்தல் அமைத்ததற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். -- நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே, கே.கொளந்தபாளையம் கிராமத்தில் புடவைக்காரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், இன்று சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. அதையொட்டி, கோவில் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், தென்னங்கீற்றுகளால் பந்தல் அமைத்து சமையல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்தில் சைவ விருந்து, , கிடா விருந்து நடக்க உள்ளது. இந்த அரசு பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 19 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், அதே வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளி வளாகத்தில், விருந்து வைக்க பந்தல் அமைத்துள்ளதால், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:கொளந்தபாளையம் கிராமத்தில் உள்ள புடவைக்காரியம்மன் கோவிலுக்கு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை வெளியூர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அதேபோல் நடப்பாண்டு சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர். உள்ளூர் மக்கள், இந்த திருவிழாவை கொண்டாடுவது வழக்கமில்லை. பள்ளி வளாகத்தில் அமைத்துள்ள பந்தலை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சமையல் கூடத்தால் தீ விபத்து ஏற்பட்டால், பெரும் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, தலைமையாசிரியர் வளர்செல்வியிடம் கேட்டபோது, ''இன்று (நேற்று) காலை, பள்ளிக்கு வந்தபோது தான், பள்ளி வளாகத்தில் விருந்து பந்தல், சமையல் கூடாரம் அமைத்தது தெரியவந்தது. இதுகுறித்து எந்த அனுமதியும் கோவில் நிர்வாகம் பெறவில்லை. நாமக்கல் மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம், இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளேன்,'' என்றார்.பரமத்தி வட்டார, ஏ.இ.ஓ., கவுரி கூறுகையில், ''எங்களிடம், கொளந்தபாளையம் அரசு பள்ளிக்கு, 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க மட்டுமே அனுமதி வாங்கியுள்ளனர். பள்ளி விளையாட்டு மைதானத்தில், பந்தல் அமைத்து சமையல் செய்ய அனுமதி கோரவில்லை. இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்,'' என்றார். டி.இ.ஓ., பாலசுப்பிரமணியிடம் கேட்டபோது, ''இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. நான் தற்போது தான் இப்பகுதிக்கு பணிக்கு வந்துள்ளேன். பள்ளி மைதானத்தில் பந்தல் அமைத்து சமையல் செய்ய அனுமதித்தது குறித்து, பரமத்தி கல்வி அதிகாரி, ஏ.இ.ஓ.,விடம் விசாரித்து, விளக்கம் அளிக்கிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை