ஓய்வு ஆசிரியரிடம் இருந்து ரூ.7,000 பறித்து காரில் தப்பி சென்ற மர்ம நபர்
ஓய்வு ஆசிரியரிடம் இருந்து ரூ.7,000பறித்து காரில் தப்பி சென்ற மர்ம நபர்குளித்தலை, செப். 27-குளித்தலை பஸ் ஸ்டாண்டு எதிரே உள்ள வணிக வளாகத்தில், இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு பணம் எடுக்க வந்த ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் இருந்து, 7,000 ரூபாயை பறித்து கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.குளித்தலை அடுத்த, மேட்டுமருதுாரை சேர்ந்தவர் இளங்கோவன், 76. ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவர், நேற்று காலை குளித்தலை பஸ் ஸ்டாண்டு எதிரே உள்ள, இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க வந்தார். அப்போது தனது கணக்கில் இருந்து, 7,000 ரூபாய் எடுத்து விட்டு எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது, உள்ளே லுங்கி அணிந்த வந்த மர்ம நபர் ஒருவர், ஆசிரியரிடம் இருந்து பணத்தை பறித்து கொண்டு, அவரை தள்ளிவிட்டு வெளியே ஓட முயற்சி செய்தார்.ஆசிரியர் அவர் கையை பிடித்து இழுத்து பணத்தை கேட்ட போது, அந்த மர்ம நபர் பணத்தை அங்கேயே வீசி விட்டு வெளியே சென்றார். பொதுமக்கள் யாரும் வராததால், மர்ம நபர் மீண்டும் உள்ளே வந்து ஆசிரியரிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு, அவரை தள்ளி விட்டு தப்பினார். 50 மீட்டர் தொலைவில் தயார் நிலையில் நின்றிருந்த, ஷிப்ட் டிசைனர் காரில் மர்ம நபர் தப்பி சென்றார்.குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார், சம்பவ இடத்தில் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். ஏ.டி.எம்., மையத்தில் இருந்து, பணத்தை பறித்து தப்பி ஓடிய மர்ம நபரின் 'சிசிடிவி' காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.