கரூர்,கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு, மக்கள் குறைதீர் முகாம் நாளில், கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை வெள்ளியணை சாலையில் உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும், திங்கள்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது. அதில் பங்கேற்க அரவக்குறிச்சி, க.பரமத்தி, சின்னதாராபுரம், தென்னிலை, வேலாயுதம் பாளையம், வாங்கல் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பஸ்கள் மூலம் கரூர் டவுன் பஸ் ஸ்டாண்ட் சென்று, வெள்ளியணை, பாளையம், திண்டுக்கல்லுக்கு செல்லும் வேறு பஸ்கள் மூலம் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். அதேபோல் மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பஸ்களில் சுங்ககேட்டில் இறங்கி, வேறு பஸ் மூலம் கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டும்.கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கலெக்டர் அலுவலகம் வழியாக வெள்ளியணை, பாளையம் மற்றும் திண்டுக்கல்லுக்கு குறைந்தளவே பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால், மக்கள் குறைதீர் முகாம் நடக்கும் திங்கள் கிழமைகளில், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, பொதுமக்கள் கரூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல, போதிய பஸ் வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.எனவே, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடக்கும் நாளன்று, கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.