| ADDED : ஜூன் 20, 2024 07:13 AM
கரூர் : கரூரில், அரசுக்கு சொந்தமான அலுவலக சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டும் படலம் மீண்டும் தொடங்கியுள்ளது.தமிழகத்தில், அரசுக்கு சொந்தமான அலுவலக சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என, அறிவிக்கப்பட்டு விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிவிப்பையே மறைக்கும் அளவுக்கு கிளை கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. கரூரில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகளில் தனியார் தரப்பில் போஸ்டர்கள் ஏராளமாக ஒட்டப்பட்டுள்ளன.குறிப்பாக, பள்ளி சுவர்களில் சினிமா படங்களின் போஸ்டர்கள் அதிகம் ஒட்டப்பட்டுள்ளது. கரூர் கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலக சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் வழிகாட்டி போர்டுகள், அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்பு போர்டுகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரசு சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள், விளம்பரங்கள் அகற்றப்பட்டு இருந்தன. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை விலக்கி கொள்ளப்பட்டதால், மீண்டும் போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.