உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 100 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி தரும் அமராவதி பழைய பாலம்

100 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி தரும் அமராவதி பழைய பாலம்

கரூர் : கரூர் அமராவதி ஆற்றில், கரூர்- - திருமாநிலையூரை இணைக்கும் பழைய பாலம், 100 ஆண்டுகளை நிறைவு செய்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.சேர, சோழ, பாண்டியர், விஜயநகர நாயக்கர்கள், மைசூரு அரசர்கள் உள்ளிட்டோர் கரூரை முக்கிய வணிகத்தலமாக கொண்டு, அந்த காலத்தில் ஆட்சி செய்ததாக வரலாறு உண்டு. அதற்கு ஆதாரமாக ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி, ரிக் ஷா உள்ளிட்டவற்றில் போக்குவரத்தை மேற்கொள்ளவும், மக்கள் அமராவதி ஆற்றை கடந்து செல்ல வசதியாகவும் பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. பொதுப்பணித்துறை மூலம் அமராவதி (பழைய) பாலத்துக்கு, 1919 ஜூன், 30ல் திவான் பகதுார் பி.ராஜகோபால ஆச்சாரியார் அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டுகள் கழித்து, 1924- ஜூன், 20 ல் திருச்சிராப்பள்ளி ஜில்லா போர்டு தலைவர் தேசிகாச்சாரி பெயர் சூட்டப்பட்ட பாலம், அப்போதைய சென்னை கவர்னர் விஸ்கவுன்ட் கோஸ்சென் ஹாக்ஹர்ஸ்ட் திறந்து வைத்தார். 1977ம் ஆண்டு அமராவதி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தாங்கிய இப்பாலம், ஆண்டுகள் பல ஆனதால் வலுவிழந்தது, 30 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தில் கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.பாலத்தின் மேற்கு பகுதியில், புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அமராவதி புதிய பாலம் இடிந்தபோதும், பழைய பாலம்தான் போக்குவரத்துக்கு உதவியது. கரூர் நகரில், பொழுது போக்கிற்காக வசதிகள் ஏதும் இல்லை என்ற மக்களின் ஏக்கத்தை போக்கும் வகையில், அமராவதி பழைய பாலம் பூங்காவாக மாற்றம் செய்யப்பட்டது. பொதுமக்கள் நடைபயிற்சிக்கான வசதி, ஓய்வெடுக்கும் வகையில் இருக்கைகள் என நவீன வசதிகளுடன், இந்த பாலத்தில் பூங்கா தயாராகி, பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.கரூர் மக்களோடும், கரூர் வரலாற்றோடும் பின்னி பிணைந்து, பசுமையான நினைவுகளை தாங்கிய இப்பாலம் நேற்றுடன், 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஒரு நுாற்றாண்டை கடந்தும் பாலம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை