| ADDED : ஜன 06, 2024 10:40 AM
கரூர்: வாங்கல் அருகே, மாட்டு வண்டியில் மணல் அள்ள தொழிலாளர்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம் நன்னியூர் புதுார், மல்லம்பாளையம் காவிரியாற்று பகுதிகளில், மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி கேட்டு, கரூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர் நலச் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில், மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று காலை, மல்லம்பாளையம் காவிரியாற்று பகுதியில், காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.தகவல் அறிந்த நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் செல்லமுத்து, மண்மங்கலம் தாசில்தார் குமரேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, 'அமலாக்கத்துறை அதிகாரிகள், மண் குவாரிகள் நடந்த இடங்களில் ஆய்வு செய்துள்ளனர். அதன் காரணமாகவும், நீதிமன்ற வழக்குகள் காரணமாகவும், மண் குவாரிகள் செயல்படவில்லை. விரைவில் மண் குவாரிகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.