கரூர் சுங்ககேட் பிரிவு சாலையில் மினி ரவுண்டானா அமைக்கலாமே
கரூர்:போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கரூர் சுங்ககேட் பிரிவு சாலையில், மினி ரவுண்டானா அமைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர், சுங்ககேட் பகுதியில் திருச்சி சாலை, கரூர் நகர சாலை, திண்டுக்கல் சாலைகள் பிரிந்து செல்கின்றன. இதில் லாரிகள், பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள், தினமும் ஆயிரக்கணக்கில் செல்கின்றன. சுங்ககேட் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இங்கு சிக்னல் அமைக்கப்பட்டு போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் உள்ளனர். இவர்கள், சில நாட்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். சிறிய விபத்து ஏற்பட்டால், திருச்சி மற்றும் திண்டுக்கல் சாலையில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. விபத்துகளை தடுக்க, சாலை சந்திப்பில் மினி ரவுண்டானா அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். சுங்ககேட் பகுதியில் பள்ளி, அரசு அலுவலகம் அருகில் இருப்பதால் நடந்தும், சைக்கிள் மற்றும் இரண்டு சக்க வாகனத்தில் செல்கின்றனர். அவ்வப்போது, திருச்சி மற்றும் திண்டுக்கல் சாலையில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சுங்க கேட் பகுதியில் சிறிய ரவுண்டானா அமைத்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.