குகை வழிபாதை பணி இழுபறி
கரூர், கரூர் -திருச்சி சாலையில், குளித்தலை தெற்கு மணத்தட்டைக்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் உள்ளது. இதை கடந்து பள்ளி,கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் செல்கின்றனர். பல்வேறு, வாகனங்களிலும், இந்த வழியாக குளித்தலை நகரத்திற்கு வந்து செல்கின்றன. கேட் மூடும் போது பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இங்கு, குகை வழிப்பாதை கட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இப்பகுதியில், ரயில்வே சார்பில் குகை வழிப்பாதை அமைக்கு பணி தொடங்கியது. ஆனால், 5 ஆண்டுகளாக பணியில் இழுபறி நீடிக்கிறது. குகை வழிப்பாதை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஊற்று நீர் வருவதால், பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மண் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால், தண்டவாளத்தை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிவருகின்றனர். குகைவழிப்பாதை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியின் மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.