தீபாவளியை முன்னிட்டு கரூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம்
கரூர், அக். 30-தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் வெளியூர்களுக்கு பஸ்களில் புறப்பட்டனர். இதனால், நேற்று மாலை கரூர் பஸ் ஸ்டாண்டில், கூட்டம் களை கட்டியது.நாடு முழுவதும் நாளை, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், நாளை மட்டுமின்றி, தமிழகத்தில் நாளை மறுநாள் (நவ., 1ல்) அரசு விடுமுறை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. வரும் நவ., 2,3 ல் பொது விடுமுறையாக உள்ளது.மேலும், இன்று அரை நாள் பள்ளி, கல்லுாரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்து, தமிழக அரசு நேற்று மதியம் உத்தரவிட்டது. இதையடுத்து, பொதுமக்கள், நேற்று வெளியூர்களுக்கு புறப்பட்டனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை முதல் இரவு வரை தொடர்ந்து, பொதுமக்கள் பல்வேறு நகரங்களுக்கு பஸ்களில் புறப்பட்டு சென்றனர். மேலும், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதேபோல், கரூர் ரயில்வே ஸ்டேஷனிலும் ரயில்களில் பயணிகள் ஏறி தங்கள் ஊர்களுக்கு பயணித்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர், இன்று மதியத்துக்கு மேல், பஸ்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர்.