| ADDED : ஆக 06, 2011 02:16 AM
கரூர்: கரூர் அமராவதி பாலத்தில் தடுப்புக்காக வைக்கப்பட்ட இரும்பு கம்பிகள் அச்சுறுத்தும் வகையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர். கரூர்- பசுபதிபாளையம் பகுதியை இணைக்கும் வகையில் காமராஜர் முதல்வராக இருந்த போது அமராவதி ஆற்றில் குறுக்கை தரைமட்ட பாலம் கட்டப்பட்டது. கடந்த ஓராண்டுக்கும் முன்னர் பாலத்தின் தூண்கள் மெல்ல மெல்ல பழுதைடைய தொடங்கியது. பாலத்தின் அமைக்கப்பட்டுள்ள ரோடுகளிலும் பள்ளம் ஏற்பட்டது. இதனால் பாலத்தின் வழியாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. டூவிலர் மட்டுமே செல்ல கூடிய வகையில் பாலத்தின் அருகே இரும்பு கம்பிகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டது. நாளடைவில் இரும்பு தடுப்பு கம்பிகள் மெல்ல மெல்ல மண்ணுக்குள் புதைய ஆரம்பித்தது. மண்ணில் புதைந்த தடுப்பு கம்பிகள், டூவிலரில் செல்பவர்களுக்கு இணையாக உள்ளதால் அடிக்கடி அந்த பகுதிகளில் விபத்து ஏற்படுகிறது. பசுபதிபாளையம் மற்றும் சணப்பிரட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரூருக்கு செல்லும் டூவிலரில் செல்லும் பொதுமக்கள், பழுதடைந்த அமராவதி பாலத்தின் வழியாகவே சென்று வருகின்றனர். எனவே, பசுபதிபாளையம் அருகே அமராவதி ஆற்றில் கட்டப்பட்டு, பழுதடைந்த நிலையில் உள்ள தரைமட்ட பாலத்தில் உள்ள இரும்பு கம்பிகளை அகற்றி, முறையான தடுப்பு அமைக்க வேண்டும்' என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.