| ADDED : ஜூலை 22, 2011 11:59 PM
க.பரமத்தி: 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட வளர்கல்வி மையத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வளர்கல்வி மைய பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2001 மற்றும் 2006ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வளர்கல்வி மைய திட்டம். இதன்மூலம் கிராமப்புறங்களில் உள்ள கல்வியறிவு கற்க முடியாத நிலையில் உள்ளவர்கள், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் வளர்கல்வி மையம் கொண்டு வரப்பட்டது. முதன்முறையாக கடந்த 2002ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அந்த திட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும், ஒரு பஞ்சாயத்துக்கு ஒரு மையம் அமைக்கப்பட்டு அதற்கு மைய அமைப்பாளர் மற்றும் உதவியாளர் என இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட வளர்கல்வி மைய திட்டம் 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற தி.மு.க., அரசு இத்திட்டத்தை முற்றிலும் நிறுத்தியது. இதனால் மைய பணியாளர்கள் நிலை இதுவரை என்ன ஆனது என்ற நிலை கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக, கரூர் மாவட்ட அளவில் 158 பஞ்சாயத்துகள் உள்ளன. ஒருங்கிணைப்பாளர், அமைப்பாளர் மற்றும் உதவி அமைப்பாளர் உள்பட 350க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வளர்கல்வி மையத்தில் பணியாற்றி வந்தனர். அவர்கள் அனைவரும் கடந்த ஐந்தாண்டாக ஊதியமின்றி தவித்து வருகின்றனர்.எனவே, தற்போது அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில் வளர்கல்வி பணியாளர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.