உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 46 பேர் மனு

கரூர் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 46 பேர் மனு

கரூர்: கரூர் நகராட்சிக்கு கவுன்சிலர் பதவிக்கு நேற்று முன்தினம் 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பாதுகாப்பு வந்த போலீஸார் ஒதுங்கி நின்றதால் நகராட்சி அலுவலகத்தில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 17 ம் தேதி முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. கடந்த 22 ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 22, 23, மற்றும் 24 ம் தேதிகளில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. 25 ம் தேதி விடுமுறை நாளாகும். நேற்று முன்தினம் காலை வேட்புமனு தாக்கல் செய்ய கட்சியினர் வந்தனர். ஆனால் அப்போது நகராட்சி அலுவலகத்தில் குறைந்தளவே போலீஸார் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11.40 மணிக்கு 15 வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் மோகன்ராஜ் என்பவர் முதலில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது 100 க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் நகராட்சி அலுவலகத்தின் உள்ளே சென்றனர். ஆனால், பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீஸார் கூட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் நகராட்சி அலுவலகத்தில் கூச்சலும் குழப்பமாக இருந்தது. வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே வர வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் கண்டுகொள்ளவில்லை. அப்போது அறையில் இருந்து வெளியே வந்த நகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ரவிச்சந்திரன், 'நகராட்சி அலுவலகத்தில் வேட்பாளர் மற்றும் அவருடன் நான்கு பேர்கள், பத்திரிக்கையாளர்கள் தவிர மற்றவர்களை வெளியே அனுப்பும்படி கூறினார். இதையடுத்து சிறிது நேரத்தில் கரூர் டவுன் டி.எஸ்.பி., மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் முகேஷ், பிருந்தா ஆகியோர் தலைமையில் அதிகளவில் போலீஸார் கரூர் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது நகராட்சி அலுவலகத்தில் இருந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்களை போலீஸார் வெளியேற்றினர். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள இரண்டு கேட்களை போலீஸார் மூடி பாதுகாப்புக்கு நின்றனர். அதை தொடர்ந்து 16 வது வார்டுக்கு, விசாகன், 20 வது வார்டுக்கு நெடுஞ்செழியன், 23 வது வார்டுக்கு கமலா, 43 வது வார்டுக்கு அமராவதி உள்பட அ.தி.மு.க., சார்பில் 35 பேரும், 11 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை