உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பா.ஜ.,வுடன் தி.மு.க., தான் கள்ள உறவு வைத்துள்ளது

பா.ஜ.,வுடன் தி.மு.க., தான் கள்ள உறவு வைத்துள்ளது

கரூர்: ''பா.ஜ.,வுடன், தி.மு.க., தான் கள்ள உறவு வைத்துள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.கரூர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், மாவட்ட பாசறை செயலாளர் கமலகண்ணன் தலைமையில், வேலாயுதம்பாளையத்தில் நடந்தது. அதில், மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சி அமைந்து, மூன்று ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், தமிழக மக்கள் கடும் விரக்தியில் உள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, பல மக்கள் திட்டங்களை தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளையும், தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. இதனால், தமிழக சட்டசபைக்கு எப்போது, தேர்தல் நடந்தாலும், அ.தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெற்று, பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., முதல்வர் ஆவது உறுதி. பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என, பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.ஆனால், தி.மு.க.,வினர் தான் நாள்தோறும், பா.ஜ., - அ.தி.மு.க., கள்ள உறவு இருப்பதாக பேசி வருகின்றனர். உண்மையில், பா.ஜ.,வுடன், தி.மு.க., தான் கள்ள உறவு வைத்துள்ளது. தி.மு.க., அமைச்சர்கள் டில்லி சென்று, தங்களை விட்டு விடுங்கள் என, கெஞ்சுகின்றனர்.கரூரை சேர்ந்த, சிறையில் உள்ள அமைச்சர் வாய் திறந்தால், தி.மு.க., ஆட்சிக்கும், அந்த குடும்பத்துக்கும் ஆபத்து. இதனால், அவருடைய அமைச்சர் பதவியை பறிக்காமல், சிறையில் வைத்துள்ளனர்.தி.மு.க., ஆட்சியில் என்ன செய்தார்கள் என, பட்டியல் போட முடியுமா? கரூர் எம்.பி., தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிமணி, நான்கரை ஆண்டுகளாக தொகுதி பக்கம் எட்டிபார்க்கவில்லை. தேர்தல் வருகிறது என்பதால், தொகுதி பக்கம் தலைகாட்டுகிறார். அவரை, மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.வரும் எம்.பி., தேர்தலாக இருந்தாலும் சரி, ஒருவேளை சட்டசபைக்கு தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க.,வை மக்கள் ஆதரிக்க வேண்டும். மக்கள் விரோத ஆட்சியான, தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், புகழூர் நகர செயலாளர் விவேகானந்தன் உள்பட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

விடியல்
ஜன 29, 2024 14:39

கொள்ள உறவு இவர்களுக்கு எப்போதும் உண்டு. அதுவும் தலைகள் இதற்கு பெயர் போன வர்கள். உங்கள் கட்சியிலும் உண்டு


மேலும் செய்திகள்