தென்னை சார்ந்த தொழிலுக்கு பயிற்சி அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
கரூர், தேங்காய் சார்ந்த தொழிலை வளர்க்க, இளைய சமுதாயத்தினருக்கு போதிய தென்னை சாகுபடி பயிற்சி அளிக்க, அரசு முன்வர வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்து விட்ட தேங்காய்க்கு, விருந்து, விழாக்கள், பண்டிகை, சடங்குகள் என எல்லா இடத்திலும் முதல் மரியாதைதான். கேரளாவுக்கு அடுத்து, அதிகப்படியாக தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. இங்கு பல லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. புகழூர் சுற்றுப்பகுதியில் நொய்யல் முதல் தளவாபாளையம், வாங்கல், புன்னம் சுற்றுப்புற பகுதிகள் வரையிலும், 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் சாகுபடி செய்யப்படுகிறது.தென்னை சாகுபடியும், உற்பத்தியும் நல்ல வளர்ச்சி கண்டுள்ள நிலையில், தென்னை ஏறும் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக, 50 நாட்களுக்கு ஒருமுறை தேங்காய் அறுப்பதற்கு பதிலாக, 80 நாட்கள் வரை தொழிலாளருக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. விவசாயிகளும், குத்தகைதாரரும் நஷ்டமடைகின்றனர். கடந்த தலைமுறைகளில், தென்னை ஏறும் தொழிலை செய்து வந்த தொழிலாளர்கள்தான், தற்போதும் செய்து வருகின்றனர். வருங்காலத்தில் முற்றிலும் மரம் ஏறும் தொழிலாளியே இல்லாத நிலை ஏற்படும் சூழல் உள்ளது.தென்னை மரம் ஏறும் தொழிலாளர், தேங்காய் உரிக்கும் தொழிலாளர், சுமை ஏற்றும் தொழிலாளர் என தென்னை சாகுபடி சார்ந்த பணிக்கு, தொழிலாளர் பற்றாக்குறை தொடர்கிறது. எனவே, இளைய சமுதாய மானவர்களுக்கு போதிய பயிற்சியும், ஊக்கத்தொகை, சலுகை மற்றும் காப்பீடு வசதிகளை, அரசு ஏற்பாடு செய்து தென்னை வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.