| ADDED : டிச 02, 2025 02:11 AM
கரூர், கரூர் மாவட்ட குறைதீர் கூட்டத்தில், குறைந்தளவே மக்கள் மனுக்களை அளித்தனர்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு ஏராளமானோர் மனுக்களை அளிப்பது வழக்கம்.ஆனால், மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கிராமங்களில் விவசாய பணிகளில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, குறைந்தளவே மக்கள் வந்திருந்தனர். கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. அவ்வப்போது, சிலர் மட்டுமே மனுக்கள் அளித்து சென்றனர். எப்போதும், 400க்கும் மேற்பட்ட மனுக்கள் வரும் குறைதீர் கூட்டத்தில், நேற்று 261 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன.