| ADDED : மார் 25, 2024 07:03 AM
சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு தீ மிதி விழா கடந்த, 11ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மன் சப்பரம், சுற்று வட்டாரத்தில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா சென்று வந்தது. இது நிறைவடைந்த நிலையில், கோவில் வளாகத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தினமும் இரவில் பழங்குடி மக்களின் பீனாட்சி இசையுடன் கூடிய களியாட்டம் நடந்தது. நேற்றிரவு படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது. நாளை அதிகாலை, 4:௦௦ மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர், முக்கிய பிரமுகர்கள் என லட்சக்கணக்கானோர் தீ மிதித்து வழிபாடு செய்வர். ஈரோடு எஸ்.பி., ஜவஹர் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மேனகா தலைமையில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மக்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து, அரசு சார்பில், 300க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.